கடிதம் அனுப்பிய கிராமத்து மாணவியை குடியரசு தின விழா பார்க்க வைத்த கலெக்டர்
தனக்கு கடிதம் அனுப்பிய கிராமத்து மாணவியை குடியரசு தின விழா பார்க்க கலெக்டர் ஏற்பாடு செய்தார்.;
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பாப்பநத்தம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜான்சி ராணி. இந்த சிறுமிக்கு வெகு நாட்களாகவே குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்து வந்துள்ளது. அவர் கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில் குடியரசு தின விழாவை நான் பார்க்க வேண்டும் என ஆவலாக உள்ளது. அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தை பார்த்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கிராமத்தில் வசிக்கும் மாணவி ஜான்சி ராணியை அழைத்து வரும்படி பள்ளி கல்வித் துறையினருக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து பள்ளி கல்வித் துறையினர் மாணவி ஜான்சி ராணியை நேற்று காலை ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவை நேரில் பார்வையிட அழைத்து வந்துள்ளனர். போலீசாரின் அணிவகுப்பு, கலெக்டர் கொடியேற்றும் காட்சி, அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை மாணவி ஜான்சி ராணி நேரில் கண்டு ரசித்தார். அதன் பின்னர் ஜான்சி ராணியை மேடைக்கு அழைத்து பரிசு ஒன்றை அளித்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.