வேலூரில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

வேலூர் கோட்டை கொத்தளம், நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ரூ.34¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.;

Update: 2023-01-26 17:38 GMT

வேலூர் கோட்டை கொத்தளம், நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ரூ.34¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

74-வது குடியரசு தினவிழா

நாடு முழுவதும் 74-வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு காலை 8.10 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டார்.

அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 46 பேருக்கு முதல்- அமைச்சரின் காவலர் நற்பணி பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 271 பேருக்கு பாராட்டு சான்றிதழ், விபத்தில் காயமடைந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த சென்னையை சேர்ந்த கீதாவிற்கு நற்கருணை வீரன் சான்றிதழ், சமூக சேவைகள் புரிந்த மணிமாறன் உள்ளிட்ட 3 சமூக ஆர்வலர்களுக்கு நற்பணி சான்றிதழ்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

அதன்பின்னர் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 94 ஆயிரத்து 805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்

தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட குழுவினர் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கினார். குடியரசு தினவிழாவிற்கு வந்தவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

அதன்பின்னரே அவர்கள் விளையாட்டு அரங்கின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் உதவிகலெக்டர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டை கொத்தளம்

முன்னதாக வேலூர் கோட்டையில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், மக்கான் சிக்னல் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சுதந்திர போராட்டவீரர் சத்தியமூர்த்தி சிலைக்கும் கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சி அலுவலகம்

அதேபோல் வேலூர் மாநகராட்சியில் குடியரசு தினவிழா நடந்தது. துணைமேயர் சுனில்குமார், மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் சுஜாதா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். விழாவில் கவுன்சிலர்கள், உதவிகமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதில், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரமாமணி, கண்காணிப்பாளர் எழிலரசி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்