திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி வைத்து மரியாதை

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருேகஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.;

Update: 2022-08-15 17:49 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் முருேகஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

சுதந்திர தின விழா

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில் நேற்று 76-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் மற்றும் சாரணர் இயக்கத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டார். தொடர்ந்து காவல் துறையில் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் போலீசாருக்கு எவ்வாறு பயன் உள்ளதாக பணியாற்றுகின்றது என்பது குறித்தும், காவல் துறையில் மோப்ப நாய்கள் எவ்வாறு செயல்படுகிறது என்றும் செயல் விளக்கம் செய்து காணப்பித்தனர்.

தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் தேசப்பற்றை ஊக்குவிக்கும் பாடல்களுக்கு நடமாடினர். மேலும் இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பல்வேறு பிரமீடுகளை செய்து மனித கோபுரம்போல் நின்று அசத்தினர்.

மேலும் காதுகேளாதோர் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியின் மகன் கீர்த்தீஸ்வரன் சுதந்திர தின விழா குறித்து ஆங்கிலத்தில் சிறிது நிமிடங்கள் பேசினார். இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்பட பல்வேறு அரசு துறை சார்பில் மொத்தம் 781 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 654 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்