கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

வால்பாறை, பொள்ளாச்சியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

Update: 2023-02-22 18:45 GMT

வால்பாறை

உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.

இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் 'சாம்பல் புதன்' என அழைக்கப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து அதில் எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள்ஆலயத்துக்கு வருகின்ற பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தையிட்டு பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.

இந்த வருடம் ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு வால்பாறை தூய இருதய தேவாலயத்தில் ஆலய பங்கு குரு ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு மக்களின் ஒவ்வொருவரின் நெற்றியிலும் சாம்பலில் சிலுவை அடையாளமிடப்பட்டது. இதேபோல முடீஸ் புனித அந்தோனியார் ஆலயத்திலும், சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலயத்திலும், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலயத்திலும் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

பொள்ளாச்சியில் பாலக்காடு ரோட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், மகாலிங்கபுரம் சி.எஸ்.ஐ. ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதேபோல் கிணத்துக்கடவு, நெகமம், சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்