தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-27 12:56 GMT

 

சென்னை,

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிட நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ. 285 கோடி, கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ. 285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ. 115 கோடியும், ரூ. 397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து 160 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்