மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்-ஜி.கே.வாசன் பேட்டி

மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2022-09-13 17:39 GMT

பனைக்குளம்

மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.

மீனவர்கள் பிரச்சினை

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் நாகேஸ்வரனை சந்தித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி நடைபயணத்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. தமிழக அரசு சொத்து வரியை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி அனைத்து தரப்பு மக்களின் மீது சுமையை ஏற்றி உள்ளனர். மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 19-ம் தேதி த.மா.கா. சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. ராமேசுவரம் மீனவர்கள் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் அக்கறை செலுத்தாதது வருத்தம் அளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எந்த மாற்றமும் ஏற்படாது

டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசு எவ்வித ஆர்வமும் செலுத்தவில்லை. வெளி மாநிலத்தவர் அதிகமாக வந்து செல்லும் ராமேசுவரத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும். திராவிட மாடலால் எந்த மாற்றமும் ஏற்படாது. தி.மு.க. ஆட்சியில் மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதன் வெளிப்பாடு தேர்தல் முடிவில் தெரியவரும். தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்