கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் - தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2023-05-16 12:49 GMT

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் இன்று அதிகாலை வரையில் 14 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதில் அரசியல் கட்சியினர் யாருக்கேணும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதைபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் விஷசாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கள்ளச்சாராயம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்