6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது

ஆசிரமம் கட்டுவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி செய்த 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-08-09 20:46 GMT

மதுரை,

ஆசிரமம் கட்டுவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி செய்த 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ரூ.4½ கோடி மோசடி

சிவகங்கையை சேர்ந்த ரவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,

சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் என் மீது 4.65 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ராமதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மனுதாரர் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ரவி, துபாயில் வசிக்கும் டாக்டர் தம்பதியரான ராமதாஸ்-சுப்ராதேவி ஆகியோரிடம் தன்னை ஆன்மீக குரு என அறிமுகப்படுத்தி சிவகங்கையில் ஆசிரமம் கட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவர்களிடமிருந்து 4.65 கோடி ரூபாயை கடந்த 2018-ம் ஆண்டு பெற்றுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற பின்பு அவர் உள்பட சிலர் தலைமறைவாகிவிட்டனர். இதன் அடிப்படையில் புகார் பெறப்பட்டு ரவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை முடிந்து சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.

வழக்கை ரத்து செய்ய முடியாது

இதனை பதிவு செய்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணையில் பண மோசடி நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. அதேபோல மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடித்து குற்ற பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டதால், இந்த விசாரணையை வேறு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்