நடனமாட அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை

பெண்களை விபசாரத்தில் தள்ளும் கொடுமை நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.;

Update:2024-05-31 10:53 IST

சென்னை,

வெளிநாடுகளில் உள்ள ஓட்டல்களில் நடனமாடினால் கைநிறைய லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, தமிழக இளம்பெண்களை அழைத்துச்சென்று அங்கு விபசாரத்தில் தள்ளும் கொடுமை நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

சம்பாதிக்கும் ஆசையில் சென்ற பல இளம்பெண்கள் விபசாரத்தில் தள்ளப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்துவிட்டு சீரழிந்த நிலையில் மீண்டும் தமிழகம் வருவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் இதுபோன்ற கொடுமையில் சிக்கி தமிழகம் தப்பி வந்த இளம்பெண் ஒருவர் இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் ஒரு குறிப்பிட்ட விபசார கும்பல் இதுபோன்ற கொடுமையான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த இளம்பெண் தனது புகாரில் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி குறிப்பிட்ட விபசார புரோக்கர் கும்பலை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 24), ஜெயக்குமார் (40), ஆபியா (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஏராளமான இளம்பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி விபசாரத்தில் தள்ளியது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் 4 முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெளிநாட்டு ஓட்டல்களில் நடனமாட அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்