நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்;கொலையா? போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையில் தொழிலாளி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-08 17:52 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையில் தொழிலாளி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடையில் ஆண் பிணம்

நாகர்கோவில் கோட்டார் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து தீயணைப்பு நிலையம் செல்லும் அவ்வை சண்முகம் சாலை ஓரத்தில் கழிவுநீர் ஓடை செல்கிறது. இதில் நேற்று ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

கொலையா?

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் வடசேரி வெள்ளாளர் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 42) என்பதும், தூத்துக்குடியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அய்யப்பன் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த அய்யப்பன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் அவர் கழிவுநீர் ஓடையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. அதிக மதுபோதையில் தவறி விழுந்து அவர் இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்