ராணுவ வீரரின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது
லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.;
திருச்சி மாவட்டம் லால்குடி நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43). இவருடைய மனைவி ஜான்சி ராணி. இவர்களுடைய மகன் ஜெனி ஜோயல் (9). கடந்த 1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் யூனிட்டில் ஹவால் தாரராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் லடாக்கில் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெமி ஜூலியன் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந் தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு ராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது உடல் லடாக்கில் இருந்து விமான மூலம் ஐதராபாத் வழியாக திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ பட்டாலியனை சேர்ந்த ராணுவ வீரர்கள், அதிகாரி அழகர்சாமி மற்றும் மயில்வாகனன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து அவரது உடல் மாலை 5.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல் இன்று (வியாழக்கிழமை) அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்ய இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.