மாயமான இளைஞரின் உடல் காயங்களுடன் கடற்கரையில் ஒதுங்கியது
"முதலும் நீ முடிவும் நீ" என காதலியுடன் எடுத்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளைஞர் மாயமானதாக சொல்லப்படுகிறது.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த இளைஞர் பானுஸ்ரீதர். இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் கணினி வகுப்பில் சேர்ந்து பயின்று வந்தார். சொந்த ஊருக்கு வந்திருந்த பானுஸ்ரீதர், கடந்த 29-ம் தேதி, வேப்பஞ்சேரி என்ற பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மாயமானார். குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பானுஸ்ரீதரின் உடல், சந்திரபாடி கடற்கரையில் கரை ஒதுங்கியதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பானுஸ்ரீதர் மாயமாவதற்கு முன்பு, "முதலும் நீ முடிவும் நீ" என காதலியுடன் எடுத்த புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மாயமானதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததால், பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ பதிவு செய்யவும், காதலித்த பெண்ணின் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.