திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேர் உடல்களும் கரை ஒதுங்கின

திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேர் உடல்களும் அடுத்தடுத்து கரை ஒதுங்கின.

Update: 2022-12-27 09:06 GMT

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்களில் சுமார் 25 பேர் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் கடற்கரையை சுற்றிப்பார்க்க வந்தனர். அதில் 8 பேர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் 8 பேரும் சிக்கிக்கொண்டனர். அதில் 4 பேர் தப்பித்து கரை வந்தனர். ஆனால் முஸ்தகீன் (வயது 22), அவருடைய தம்பி இப்ராஹிம் (20), வஷீம் (26), புர்கான் (28) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கி மாயமானார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அங்கிருந்த மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர். மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் 4 பேரும் கிடைக்கவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் இருந்து 20 தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாயமானவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை கிடைக்காததால் கடலோர காவல் படையினரும் 4 ேபரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை எண்ணூர் கடற்கரை சாலையில் ஐ.டி.சி. கம்பெனி அருகே வஷீம், புர்கான், முஸ்தகீன் ஆகியோரது உடல்களும், பலகை தொட்டிகுப்பம் பகுதியில் இப்ராஹிம் உடலும் என மாயமான 4 பேரின் உடல்களும் அடுத்தடுத்து ஒருசில மணிநேர இடைவெளியில் கரை ஒதுங்கின.

போலீசார் 4 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராட்சத அலையில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்