தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-12 15:10 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கஞ்சா

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட அளவில் 8 தனிப்படைகள் அமைத்தும், உட்கோட்ட அளவில் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையிலும், அந்தந்த போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 98 வழக்குகள் பதிவு செய்து 153 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 94 கிலோ கஞ்சா மற்றும் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 195 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 114 நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் 94 நபர்களிடம் இருந்து பிணைப்பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

குட்கா வழக்கு

நடப்பு ஆண்டில் இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 926 வழக்குகள் பதிவு செய்து 966 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 6906 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 46 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 11 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.13 லட்சத்து 59 ஆயிரத்து 614 முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 31 பேர் உட்பட 127 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறாமல் தடுப்பதற்கு, அந்தந்த போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அதுவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்