கஞ்சா விற்பனை தொடர்பாக 1,113 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கஞ்சா விற்பனை தொடர்பாக 1,113 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-13 18:23 GMT

நாகர்கோவில்:

கஞ்சா விற்பனை தொடர்பாக 1,113 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு பேனர்

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதியாக குமரி மாவட்ட போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்த வாட்ஸ்-அப் எண்ணில் (7010363173) புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த எண்ணில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் தகவலும் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பு விழிப்புணர்வு பேனர்களை பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதன் அடையாளமாக 10 பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விழிப்புணர்வு பேனரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும், கடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30, 40 சதவீதம் அதிகமாக குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் இன்று வரை 57 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்துக்காக 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,113 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

107-வது சட்டப்பிரிவின் கீழ் (கோட்டாட்சியர் அல்லது உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள்) 51 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். தற்போது அதிகமாக கூரியர் நிறுவனங்கள் மூலமாக கஞ்சா கடத்தப்படுகிறது. விசாகப்பட்டினம், மேகாலயா மாநிலம் சில்லாங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூரியர் நிறுவனங்கள் மூலம் கஞ்சா வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே 2 கிராம் கஞ்சா பிடிபட்டாலும் அது எங்கிருந்து வந்தது? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வசதியாக 7 சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளோம்.

ஆந்திராவில் இருந்து...

இந்த ஆண்டில் குட்கா உள்ளிட்ட போதை பாக்குகள் மொத்தம் 8,291 கிலோ பறிமுதல் செய்துள்ளோம். 356 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா அதிகமாக ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிய பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்