சின்னசேலம் பகுதியில்கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
சின்னசேலம் பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.;
சின்னசேலம்,
சின்னசேலத்தில், சேலம் மெயின் ரோட்டில் ஒரு தியேட்டர் இயங்கி வருகிறது. இங்கு சில நாட்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த நடராஜன் மகன் செல்வம் (வயது 29) என்பவர் படம் பார்க்க வந்தார். அப்போது, தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தியிருந்தார். இதற்கான ரசீதையும் செல்வம் பெற்றுக்கொண்டார்.
படம் முடிந்த பின்னர், தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். ஆனால் அங்கு மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து அவர் சின்னசேலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அங்குள்ள காண்காணிப்பு கேமரா காட்சியை கைப்பற்றி பார்த்த போது, ஒருவர் செல்வத்தின் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
ஒருவரை பிடித்து விசாரணை
இந்த நிலையில், சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், போலீஸ் ஏட்டு கோவிந்தன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு கனியாமூர் கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இரும்பு கம்பியுடன் ஒருவர் வந்தார். அவர் சினிமா தியேட்டரில் இருந்து கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தவர் போன்று இருந்ததை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு இன்ஸ்பெக்டர் ராஜாராமன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் சின்னசேலம் அடுத்த கனியாமூர் வடக்கு தெருவை சேர்ந்த சிவராமன் மகன் ராஜேஷ் (39) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார் என்பது தெரியவந்தது.
மாணவிகள் விடுதியிலும் கைவரிசை
மேலும், சினிமா தியேட்டரில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா வீடியோவை வைத்து அவரிடம் விசாரித்தனர். அதில், வீடியோ காட்சியில் இருப்பது தான் என்றும், மோட்டார் சைக்கிளை திருடி சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மேற்கொண்டு அவரிடம் விசாரித்தில், சின்ன சேலம் பகுதியில் மேலும் 3 மோட்டார் சைக்கிளை திருடியதாகவும், சின்னசேலம் சரவணா நகரில் உள்ள மாணவிகள் தங்கும் தனியார் விடுதியில் 3 ஆயிரம் ரூபாய், டி.வி., ஐம்பொன் ருத்ராட்ச மாலை, ஒரு செல்போன், 4 பென்ட்டிரைவ் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை திருடியதாகவும், வரஞ்சரம் அருகே ஒரு கோவில் உண்டியலை உடைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, ராஜேசை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.