ஆட்டோ கவிழ்ந்து டிரைவரின் கால்கள் முறிந்தன
ஒடுகத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவரின் 2 கால்களும் முறிந்தன.
ஒடுகத்தூரை அடுத்த நேமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூரில் இருந்து ஏரியூர் நோக்கி சென்றுள்ளார். அங்கு ஆட்களை இறக்கி விட்டு விட்டு மீண்டும் ஒடுகத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். கீரைக்குட்டை அருகே வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க ஆறுமுகம் ஆட்டோவை நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறுமுகத்தின் இரண்டு கால்களும் முறிந்தது.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.