சேவூர்
மகத்துவம் மிகுந்த மார்கழி மாதத்தை வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றனர்.
மார்கழி மாதம்
மார்கழி மாதம் மகத்துவமானது. தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள்.
மார்கழி முதல் நாளிலிருந்து 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம். மார்கழி மாதங்களில் அழகிய கோலமிட்டு அந்த கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுப்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளது. இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப்பூக்கும் என்பதால் இந்தப் பூவினை நம் முன்னோர்கள்
பயன்படுத்தினார்கள்.
கோலம் இடுதல் ஒரு கலை
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. கோலம் இடுதல் ஒரு கலை. இதில் ஒரு ஆரோக்கிய ரகசியமும் ஒளிந்துள்ளது. கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும், மனதிற்கும் நல்லது. விடியற்காலையில் எழுந்து கோலம் இடும் பழக்கம் ஓசோனிலிருந்து வரும் சுத்தமான காற்று கிடைக்க செய்கிறது.கோலம் இடுவது ஒரு வகையில் கணக்கு எனலாம். கோலங்கள் போடாத வீடுகளில் கூட மார்கழி மாதத்தில் கோலமிட்டு நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணிக்காய் பூவையாவது வைத்திருப்பார்கள். நம் வீட்டில் பூக்கும் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது செம்பருத்திப்பூக்களை அதிகம் வைக்கின்றனர்.மேலும், கோலம் இடுபவருக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் மிகையில்லை. கிராமப்புறங்களில் இன்றும் அதிகாலையில் எழுந்து சானம் தெளித்து கோலம் இடுவதைப் பார்க்கலாம்.இந்த பழக்கம் சிறு நகரங்களிலும், சிற்றூர்களிலும் இருந்தாலும் நகர்புறங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக மாறிவருகிறது.
கோலத்தின் வகைகள்
திருவிழாக்களில் முதன்மையான இடத்தை கோலம் பிடிக்கிறது.இறை வழிபாட்டிலிலும், வீட்டின் மங்கள விழாக்களிலும், பள்ளி கல்லூரி விழாக்களிலும் கோலமிடும் பழக்கம் இருக்கிறது. முக்கியமாக தமிழர்களின் திருவிழாவான பொங்கல்
திருநாளுக்கு முன் மார்கழி மாதத்தில் வரும் 30 நாட்களும் வாசலில் பெரிய கோலமிடுவது வழக்கம். அதிகாலையில் பெண்கள் வீடுகளில் மாட்டு சாணம் தெளித்து, கோலமிட்டு மார்கழிமாத நாளை வரவேற்பர். மற்றும் மார்கழி மாதம் முழுவதும் தினசரி கோலத்தின் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து மலர்களால் கோலத்தை அலங்கரிந்தனர். கோலத்தின் மீது தீபங்கள் வைத்தும் மார்கழி மாதத்தை வரவேற்றனர். இதையடுத்து, மார்கழி மாதம் 30 நாட்கள் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்ததை தைப்பொங்கல் திருநாளில், பிள்ளையார் பொங்கல் வைத்து பிள்ளையார்களை வைத்து வழிபட்டு பின்னர் தண்ணீர் இருக்கும் இடமான ஆற்றிலோ, குளத்திலோ கொண்டு சென்று சாண பிள்ளையார்களை விட்டு வருவர். இன்றும் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் மார்கழி மாதத்தில் பெண்கள் தினசரி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டு வருவதை காணமுடிகிறது.
------------