பார்சல் ஏற்றி சென்ற வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்ற ஆசாமிகள்

திருவட்டாரில் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் பார்சல் வாகனத்தின் சாவியை மர்ம நபர்கள் பிடுங்கி சென்றதால் அந்த வாகனம் சாலையில் நின்றது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-02-12 21:44 GMT

திருவட்டார்:

திருவட்டாரில் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் பார்சல் வாகனத்தின் சாவியை மர்ம நபர்கள் பிடுங்கி சென்றதால் அந்த வாகனம் சாலையில் நின்றது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பார்சல் சர்வீஸ் வேன்

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பார்சல் சர்வீஸ் வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேன் புலியிறங்கி பகுதியில் வந்த போது அதை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் இருந்தனர். அவர்கள் வேனை முந்தி செல்ல ஹாரன் அடித்தபடி வந்தனர். ஆனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் பார்சல் சர்வீஸ் வேன் டிரைவர் வழி விடாமல் வாகனத்தை மெதுவாக ஓட்டி சென்றார்.

அந்த வேன் திருவட்டார் காங்கரை சந்திப்பில் வந்த போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் வேனை டிரைவர் நிறுத்தினார்.

சாவியை பிடுங்கி சென்றனர்

உடனே, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் வேன் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி 'வழி விட முடியாதா?' எனக்கேட்டு தகராறு செய்தனர். அத்துடன் வேனில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக திருவரம்பு சாலையை நோக்கி தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் டிரைவர் வாகனத்தை இயக்க முடியாமல் சாலை நடுவே நிறுத்தியிருந்தார்.

இதனால் இரு பக்கவும் வாகனங்கள் வரிசையாக நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த மோட்டார் சைக்கிள் மீண்டும் அந்த பகுதியில் வந்தது. அதில் இருந்தவர்கள் பார்சல் வேனில் அருகே சாலையில் சாவியை தூக்கி வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

போலீசில் புகார்

சாவி கிடைத்த மகிழ்ச்சியில் டிரைவர் வேனை இயக்கி சென்றார். மேலும் இதுகுறித்து வேன் டிரைவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சாவியை பறித்து சென்ற நபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்