இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்கிறது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்கிறது என்று முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் கூறினார்.;
கடையநல்லூர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் கடையநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய அளவிலான பவளவிழா மாநாடு மார்ச் மாதம் 9, 10-ந் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
முதல் நாளில் அகில இந்திய அளவிலான முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள ஏழை எளிய இஸ்லாமிய பெண்கள் 75 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.2.25 கோடி மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, முஸ்லிம் லீக் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த தொகுதியில் தேசிய தலைவர் காதர்மொகிதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், தென்காசி மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது, முஸ்லிம் லீக் நகரமன்ற உறுப்பினர் அக்பர் அலி, மாநில பேச்சாளர் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கடையநல்லூர் பேட்டை பகுதியில் முன்னாள் மாவட்ட செயலாளர் இக்பால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.