200 ஆண்டுகள் பழமையான ராணி மண்டபம் சிதிலமடைந்து கிடக்கும் அவலம்

200 ஆண்டுகள் பழமையான ராணி மண்டபம் சிதிலமடைந்து கிடக்கும் அவலம்;

Update: 2023-01-28 19:49 GMT

தஞ்சை அருகே மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ராணி மண்டபம் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த மண்டபத்தை சீரமைத்து வரலாற்று சின்னமாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வரலாற்று நகரம்

தஞ்சை வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். இங்கு உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரியகோவில் உள்ளது. மேலும் அரண்மனை, பீரங்கி மேடு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சின்னங்களும் உள்ளன. இது தவிர தஞ்சை மாநகரில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட பல்வேறு ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளும் உள்ளன.

அந்த வகையில் தஞ்சையில் இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ளது சமுத்திரம் ஏரி. ஏறத்தாழ 800 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி பார்ப்பதற்கு கடல் போல காட்சியளிக்கும்.

ஒரு காலத்தில் பரந்து விரிந்த நீர் நிலையாக இருந்தது சமுத்திரம் ஏரி. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஏரியில் அரசும், தனியாரும் ஆக்கிரமித்து வருவதால் தற்போது ஏரி, குளம்போல சுருங்கி விட்டது. இந்த ஏரியை தற்போது சுற்றுலா தலமாக்கி படகு விடுவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நீராழி மண்டபம்

இதற்காக ஏரியில் ஆங்காங்கே பறவைகள் தங்கும் வகையில் தீவுகள் ஏற்படுத்தப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏரிக்கரையில் மாரியம்மன் கோவில் பின்புறம் பாழடைந்த மிகவும் பழமைவாய்ந்த கட்டிடம் ஒன்றும் உள்ளது. நீராழி மண்டபம் என அழைக்கப்படும் இந்த மண்டபத்தை ராணி மண்டபம் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும், மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏறக்குறைய 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் தரை தளமும், அதன் கீழே சுரங்க தளமும் காணப்படுகிறது.. சுரங்க தளம் செல்வதற்கு படிக்கட்டுகள் இருந்தாலும், தற்போது சிதிலம் அடைந்துள்ளன.

சுரங்க தளம்

சுரங்க தளத்தில் பொருட்கள் வைப்பறை உள்ளது. போர் உள்ளிட்ட அவசர காலத்தில் மன்னர் குடும்பத்தினர் தங்களது விலை மதிக்க முடியாத பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக இதுபோன்ற சுரங்க தளம் அமைக்கப்படுவது வழக்கம். மேலும், சுரங்க தளத்தில் சமையல் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. புதர் நிறைந்திருப்பதால், இன்னும் அறைகள் உள்ளதா? என்பது தெரியவில்லை.

தரை தளத்தில் அறைகள் பல இருப்பதாக தெரிகிறது. கட்டிடத்தில் வெளிப்பகுதியில் இருபுறமும் நீண்ட திண்ணைகள் காணப்படுகின்றன. தலா 30 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்தத் திண்ணைகள் காற்று வாங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

படகில் வந்த மன்னர்கள் குடும்பத்தினர்

அந்த காலத்தில் மராட்டிய மன்னர் குடும்பத்தினர் தஞ்சை அரண்மனையில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு சமுத்திரம் ஏரி வழியாக படகு மூலம் சென்றுள்ளனர். அப்போது இந்த நீராழி மண்டபத்தில் தங்கி அம்மனை வழிபட்டிருக்கலாம். மேலும் அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டிருக்கலாம் எனவும், இந்த மண்டபத்தில் காற்று வாங்கியபடி சமுத்திரம் ஏரியை ரசித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மன்னர் காலத்துக்குப் பிறகு இந்த மண்டபம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த மண்டபமும் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் இருந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை கையகப்படுத்தி சுற்றிலும் வேலி அமைத்து யாரும் ஆக்கிரமிக்க முடியாதவாறு செய்துள்ளது.

மேலும் மண்டபத்தின் சுவர்கள் பல்வேறு இடங்களில் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மண்டபத்தின் வெளியேயும், உள்ளேயும் செடிகள் முளைத்து காணப்படுகிறது. இதனை சீர் செய்து இந்த மண்டபத்தை வரலாற்று சின்னமாக பராமரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வரலாற்று சின்னம்

இது குறித்து தஞ்சையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

சரசுவதி மகால் நூலக தமிழ்பண்டிதர் மணிமாறன்:- மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள இந்த மண்டபம் மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். அரச குடும்பத்தினர் மாரியம்மன் கோவிலுக்கு படகில் வரும்போது இங்கு தங்குவது உண்டு. மேலும் ஏரியில் நீராடி விட்டு உடை மாற்றுவதற்கும் இந்த மண்டபத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த மண்டபத்தின் அருகே சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து செல்லும் 2 வாய்க்காலுக்கு அருள்மொழிதேவன் வாய்க்கால் என்றும், சோழமாதேவி வாய்க்கால் என்றும் பெயர் உள்ளது. மேலும் கோவில் அருகே உள்ள ஊருக்கு அருள்மொழிபேட்டை என்றே பெயர் உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்டபத்தில் உள்ள புதர்களையும், குப்பைகளையும் அகற்றினால் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும். மேலும் இந்த மண்டபத்தை ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தகவல்கள் தெரிய வரும். எனவே இந்த மண்டபத்தை ஆய்வு செய்து அதனை வரலாற்று நினைவுச்சின்னமாக பராமரிக்க வேண்டும்.

சுற்றுலா தலமாக விளங்கும்

அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன்:- பல ஆண்டுகளாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ராணி மண்டபத்தை மீட்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அழகிய தஞ்சை இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்தோம். அதன்படி அவர் ஆய்வு செய்து அதற்கு தீர்வு காணும் வகையில் முள்ளில் பட்ட சேலையை எப்படி எடுக்க முடியுமோ? அது போன்று தனியாரிடம் இருந்து மீட்டு அரசு கையப்படுத்தியது பாராட்டுக்குரியது. அப்படி மீட்கப்பட்ட ராணி மண்டபத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த புராதன சின்னத்தை பாதுகாக்க வேண்டும். இந்த மண்டபத்தில் சுரங்க அறைகளும் உள்ளது. தற்போது இங்கு செடி, கொடிகள் நிறைந்து புதர் போல காணப்படுகிறது. இதனை அகற்றுவதோடு, இந்த வரலாற்று சின்னத்தை சுற்றுலா தலமாக பராமரிக்க வேண்டும். சமுத்திரம் ஏரியை சுற்றுலா தலமாக ஆக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மண்டபத்தையும் சீர் செய்தால் இதுவும் ஒரு சுற்றுலா தலமாக விளங்கும்.

சீரமைக்க வேண்டும்

சமூக ஆர்வலர் குஞ்சிதபாதம்:- தஞ்சை என்றாலே வரலாற்று நகரம் தான். தஞ்சை மாநகரில் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஏராளமாக உள்ளது. தஞ்சையில் பல்வேறு மண்டபங்கள் உள்ளன. அந்த வகையில் தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் அருகேயும் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தற்போது சிதிலமடைந்து, புதர்கள் மண்டி கிடப்பதை உடனடியாக சீர் செய்து பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும்.

மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், அருகேயுள்ள இந்த பழமையான மண்டபத்தை சீரமைத்து, சுற்றியுள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்படும் பழங்கால சிற்பங்களை வைக்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மண்டபத்துக்கும் சென்று பார்வையிட வாய்ப்பாக அமையும். இதைசுற்றுலா தலமாக மாற்றுவதன் மூலம் அரசுக்கு வருவாயும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்