125-வது மலர் கண்காட்சி தொடங்கியது

ஊட்டியில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.

Update: 2023-05-19 22:15 GMT

ஊட்டி

ஊட்டியில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.

மலர் கண்காட்சி

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி 125-வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிறப்பு அலங்காரங்கள்

தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு சின்னங்களான தமிழ் மரவன், பட்டாம்பூச்சி, மரகதப்புறா, வரையாடு, பனைமரம், செங்காந்தள் மலர், பரதநாட்டிய கலைஞர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலங்காரங்கள் 70,000 மலர்களை கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி 200-வது ஆண்டு, 125-வது மலர் கண்காட்சி, தாவரவியல் பூங்கா தொடங்கி 175-வது ஆண்டு ஆனதை நினைவுகூரும் வகையில், மலர் அலங்காரங்கள் இடம் பெற்று உள்ளது. தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்ணுடன் மஞ்சப்பை, சர்வதேச சிறு தானிய ஆண்டையொட்டி விழிப்புணர்வு சின்னம் மற்றும் 30 ஆயிரம் மலர்களை கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது.

கலைநிகழ்ச்சிகள்

மலர் மாடத்தில் லில்லியம், மேரிகோல்டு கெரலிக்கோனியா உள்பட 30 ரகங்களை சேர்ந்த 35 ஆயிரம் பூந்தொட்டிகள், 125 நாடுகளின் தேசிய மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. 125-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மை அரங்கு உள்பட பல்வேறு வகையான காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஊட்டியில் மலர் கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கணேஷ், பொன்.ஜெயசீலன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், தமிழ்நாடு தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ரானா, மாவட்ட வன அதிகாரி கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். மலர் கண்காட்சியையொட்டி 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-------

(பாக்ஸ்)80 ஆயிரம் கார்னேசன் மலர்களால் பிரமாண்ட மயில் சிற்பம்

சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேசிய பறவையான மயில் சிற்பம் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மயில் சிற்பம் முன்பு நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அழிந்துவரும் வனவிலங்குகளை குறிக்கும் வகையில் பல்வேறு வகை மலர்களால் சிறுத்தை, டால்பின், பாண்டா கரடி, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், கடற்பசு அலங்காரங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கண்காட்சியின் முதல் நாளான நேற்று மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அலங்காரங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மாலையில் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்