மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா

Update: 2022-07-02 15:55 GMT


திருப்பூர் காங்கயம் ரோடு புளியமரத்தோட்டம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆணையாளர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தெற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, 'நாங்கள் ஒரே வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான 25 வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சங்கிலிப்பள்ள ஓடையில் குழாய் மூலம் விட்டு வருகிறோம்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதார சீர்கேடு எதுவும் இல்லை என்றும் கழிவுநீரை குழாய் மூலம் வெளியேற்றலாம் என்றும் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் குடிநீர் குழாய்க்கு குழி தோண்டியபோது கழிவுநீர் குழாய் உடைந்து விட்டது. அதன்பிறகு அங்கிருந்த சிலர் கழிவுநீர் குழாயை அடைத்து விட்டனர். அதன்பிறகு அதிகாரிகள் முன்னிலையில் குழாய் அமைக்கப்பட்டது. மீண்டும் அடைத்து விட்டதால் கழிவுநீர் எங்கள் வளாகத்தில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கழிவுநீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறினார்கள்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி, சம்பந்தப்பட்ட இடத்துக்கு அனைவரையும் அழைத்துச்சென்று கழிவுநீர் வெளியேற்றுவதற்கான பணியை மேற்கொண்டனர். இதனால் தர்ணா போராட்டம் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்