தந்தி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-17 18:45 GMT

குன்னுார், 

குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குண்டம் திருவிழா

குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டில் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அலங்கார, அபிஷேக பூஜை நடந்து வந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக குண்டம் திருவிழாவை குன்னூரில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நற்பணி மன்றத்தினர் உபயமேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வி.பி. தெருவில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஸ் நிலையம், மவுண்ட் ரோடு வழியாக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலில் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து முக்கிய வீதிகளில் அம்மன் வீதி உலா வந்தார். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், போலீசார் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் தங்களை சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் மக்கள் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் பங்கேற்றனர். தந்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை), முத்து பல்லக்கு திருவிழா வருகிற 21-ந் தேதியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்