கள்ளழகர் கோவிலில் தைல காப்பு திருவிழா- 24-ந் தேதி தொடங்குகிறது

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தைல காப்பு திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.;

Update: 2023-10-16 01:22 GMT

அழகர்கோவில்,


தைலகாப்பு திருவிழா

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தைல காப்பு திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும். அதன்படி வருகிற 24-ந் தேதி தைலகாப்பு திருவிழா தொடங்குகிறது. அன்று மாலையில் மேஷ லக்கனத்தில் நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவம் தொடங்குகிறது. 25-ந் தேதி கிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவையும் நடைபெறும். தொடர்ந்து 26-ந்தேதி துவாதசி அன்று காலை 7.31 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி சகல பரிவாரங்களுடன் நூபுர கங்கைக்கு பல்லக்கில் அழகர்மலை, பாதையின் வழியாக செல்கிறார்.

நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் பெருமாளுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து அங்கிருந்து புறப்பாடாகி நூபுர கங்கைக்கு பகல் 12 மணிக்கு மேல் சென்று ராக்காயி அம்மன் கோவிலில் எழுந்தருளுவார்.

தீர்த்தவாரி

தொடர்ந்து அன்று 1.15 மணிக்குள் தைல காப்பு கண்டருளி மாதவி மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்று, பெருமாளுக்கு திருதைலம் சாத்தப்பட்டு அங்குள்ள தீர்த்த தொட்டியில் திருமஞ்சனமாகி தீர்த்தவாரி நடைபெறும். பின்னர். மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அன்று மாலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள் வந்த வழியாகவே சென்று இருப்பிடம் சென்றடைகிறார்.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்