தை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி

தை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

Update: 2023-01-21 18:45 GMT

திருப்புவனம், 

தை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

தை அமாவாசை

திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவிலின் எதிரே உள்ள வைகை ஆற்று கரையில் ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி-தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதற்காக வைகை ஆற்றின் நடுவில் மேடான பகுதியில் பந்தல்கள் அமைத்து திதி-தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த நிலையில் நேற்று தை அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதலே முன்னோர்களுக்கு திதி- தர்ப்பணம் கொடுக்க மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திருப்புவனம் வந்திருந்தனர். வைகை ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் வசதிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முழங்கால் அளவு ஆழமாக உள்ள தண்ணீரில் சென்று பந்தல்கள் இருக்கும் இடத்தில் பொதுமக்கள், முதியவர்கள் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர். மதியத்திற்கு மேல் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் திதி-தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து புஷ்பவனேஸ்வரர் -சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முன்னதாக மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வைகை ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து இன்றி பொதுமக்கள் எளிதில் நடந்து சென்று திதி-தர்ப்பணம் கொடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திதி- தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களின் வாகனங்கள் திருப்புவனம்-மேலூர் ரோட்டில் இருபுறமும், வைகை ஆற்று மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்