ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலாளரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெக்கலூரில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தையும், கிட்டாம்பாளையம் ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமையும், சமுதாய நலக்கூடத்தையும், மறுசீரமைக்கப்பட்ட வீடுகளையும் ஆய்வு செய்தார். ஆலங்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்வித்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணி உள்பட மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார். மேலும் இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி உள்ளிட்டவர்கள் உடனிருந்தன