நிலத்தகராறில் பயங்கரம்: ஓடும் பஸ்சில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை
நிலத்தகராறில் ஓடும் பஸ்சில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி ஊராட்சி க.பங்களா பகுதியை சேர்ந்தவர் கோபி (50). இவரது மனைவி தமயந்தி (வயது 42).
கோபிக்கும், அவருடைய அண்ணன் ராஜாங்கம் (60) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்த வழக்கு, திண்டுக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நிலப்பிரச்சினைக்கு தமயந்தி தான் முக்கிய காரணம் என்று கருதி, அவரை தீர்த்துக்கட்ட ராஜாங்கம் முடிவு செய்தார். இதனால் தமயந்தியை அவர் கண்காணித்து வந்தார்.
பஸ்சில் பெண் கொலை
இந்தநிலையில் தான் நேற்று மாலை தமயந்தி, திண்டுக்கல் அருகே தோட்டனூத்து கிராமத்தில் வசிக்கிற தனது தாயை பார்க்க திண்டுக்கல் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது, தமயந்தியை பின்தொடர்ந்து அதே பஸ்சில் ராஜாங்கம் ஏறினார். தி.வடுகபட்டி பிரிவு அருகே பஸ் வந்து நின்றபோது, திடீரென ராஜாங்கம் தான் வைத்திருந்த கத்தியால் தமயந்தியை ஆட்டை அறுப்பதை போல கழுத்தை அறுத்தார். இதில் நிலை குலைந்து இருக்கையிலேயே சரிந்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் பஸ்சிலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் வலைவீச்சு
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதேபோல் ராஜாங்கமும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜாங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.