தென்காசி கடத்தல் வழக்கு: குருத்திகாவின் உறவினர்கள் 3 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு- மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

கடத்தல் வழக்கில் குருத்திகாவின் உறவினர்கள் 3 பேர் முன் ஜாமீன் கேட்ட மனு மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.;

Update: 2023-04-05 20:33 GMT


கடத்தல் வழக்கில் குருத்திகாவின் உறவினர்கள் 3 பேர் முன் ஜாமீன் கேட்ட மனு மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

கடத்தல்

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் வினீத். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். அதனால் வினீத்தின் வீட்டில் குருத்திகா வசித்தார். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக குருத்திகாவின் பெற்றோர் அளித்த புகார் மீதான விசாரணை குற்றாலம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

இந்த விசாரணைக்காக வினீத்-குருத்திகா இருவரும் போலீசில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பினர். அப்போது, குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலர் சேர்ந்து வினீத்தை தாக்கிவிட்டு குருத்திகாவை கடத்தி சென்றனர்.

முன் ஜாமீன் மீது விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக வினீத் அளித்த புகாரின்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிலர் கைதானார்கள். சிலர் தலைமறைவாக உள்ளனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள குருத்திகாவின் உறவினர்கள் விஷால் என்ற விஷால் போகர், கிருத்திகுமார் படேல், ராசு என்ற சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஒத்திவைத்தார்

அப்போது அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்