சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்க டெண்டர் வெளியீடு
சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.;
சென்னை,
'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி' எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்காக சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கலந்தலோசகர் நிறுவனத்தை பணியமர்த்த தகுதியான நிறுவனங்களிடமிருந்து மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் இரு உறை முறையில் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளிகளை 13.10.2023 முதல் 14.11.2023 பிற்பகல் 3.00 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு http://tntenders.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.