எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் இடமாற்றம்- பயணிகள் சிரமம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதி டிக்கெட் கவுண்ட்டர், முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டதால், ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

Update: 2024-05-17 03:10 GMT

சென்னை,

'அம்ரித் பாரத்' ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாடுமுழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களை மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகத்தில் மிக முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரெயில் நிலையமும், இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 144 ஆண்டுகள் பழமையான இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமான நிலையம் போன்ற பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல்களை கையாள்வதற்கான தனிப்பகுதி, புதிய எஸ்கலேட்டர் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரெயில் நிலைய கட்டிடத்தை அதன் பழமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மறுகட்டமைப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின், வடக்கு பகுதிகளில் இயங்கி வந்த, முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா' டிக்கெட் கவுண்ட்டர்கள் நேற்று முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய கவுண்ட்டர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலைய வளாகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் 3 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 தானியங்கி டிக்கெட் எந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒன்று இயங்காமல் உள்ளது.

வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து போதிய முன்னறிவிப்பின்றி டிக்கெட் கவுண்ட்டர் மாற்றி அமைக்கப்பட்டதால், நேற்றைய தினம் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.தற்காலிகமாக மாற்றப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர் குறித்த விவரம் மற்றும் கவுண்ட்டர் எங்குள்ளது என்ற குறியீடு ஆகியவை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே வைக்கப்படாததால், மின்சார ரெயில் டிக்கெட் மற்றும் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்காக வந்த பயணிகள் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்