கல்குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

அன்னவாசல் அருகே கல்குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-23 18:10 GMT

அன்னவாசல்:

தனியார் கல்குவாரி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திருவேங்கைவாசல் மற்றும் பணம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் கல்குவாரி அமைக்கவுள்ளனர். இந்தநிலையில் இந்த கல்குவாரியால் காற்று, நீர், மண், ஒளி, சமூகப் பொருளாதார சூழல், பல்லுயிர் சூழல் எவ்வாறு பாதிக்கப்படும். அந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வோம் என குவாரி நடத்தும் நிறுவனத்தினர் கூறும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 400 பக்கங்களுக்கு மேல் உள்ள நிலையில் அந்த அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதை அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் படித்து அதனால் வரும் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள முடியாது. இதனால் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

ேபாஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

இந்நிலையில் இன்று பணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. தொடர்ந்து இந்த கருத்து கேட்புக் கூட்டத்திற்கு சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று நடைபெற இருந்த கருத்து கேட்புக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் கல்குவாரி தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கை

இந்நிலையில் இதுபோல சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடும் பொழுது அந்தபகுதி மக்களுக்கு புரியும் வகையில் அவர்களுக்கான மொழியில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் தான் அதில் உள்ள நன்மை, தீமைகளை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். தமிழில் வெளியிட்ட பிறகு கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்