முப்பந்தல் அருகே சாலையோர பள்ளத்தில் டெம்போ கவிழ்ந்து டிரைவர் பலி
முப்பந்தல் அருகே சாலையோர பள்ளத்தில் டெம்போ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
ஆரல்வாய்மொழி:
முப்பந்தல் அருகே சாலையோர பள்ளத்தில் டெம்போ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
டெம்போ டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மாரிமுத்து கடந்த சில மாதங்களாக முப்பந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
பள்ளத்தில் கவிழ்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து டெம்போவில் நாகர்கோவில் சென்று விட்டு கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தார். முப்பந்தல் அருகே வந்தபோது திடீரென டெம்போ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. டெம்போவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.