ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
செம்பனார்கோவில் அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.;
பொறையாறு;
செம்பனார்கோவில் அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
சுந்தரேஸ்வர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள செல்லப்பர் வகையறா கோவிலுக்கு உட்பட்ட சுந்தரேஸ்வர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமாக பரசலூர் மேலகட்டளை கிராமத்தில் 4.27 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியரால் கோவிலின் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
நிலம் மீட்பு
இந்த நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோர் அறிவுறுத்தினர். இதன்படி இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் முருகன், செயல் அலுவலர் உமேஷ் குமார், ஆய்வாளர்கள் ஆகியோர் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 92 லட்சமாகும்.
ஏலம்
மீட்கப்பட்ட நிலம் இணை ஆணையர் அனுமதி பெற்று கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த நிலங்களில் யாரும் அத்துமீறி பிரவேசிக்க கூடாது என்றும்மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.