நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்
நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான கோவில்களில் ஒன்றான பேராத்து செல்வி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும். கோவிலில் ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு கூழ் வழங்குவது சிறப்பு வாய்ந்தது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. யாகசாலை பூஜைகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று அதிகாலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
காலை 6.15 மணிக்கு கோவில் விமானத்துக்கும், பேராத்து செல்வி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றியதும், கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கினர். பின்னர் பேராத்துசெல்வி அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.
அம்மன் வீதி உலா
தொடர்ந்து மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது. இரவில் பேராத்து செல்வி அம்மன், முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.