ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆவடியை அடுத்த கன்னபாளையம் பகுதியில் கைத்தியம்மன் கோவில் அருகே உள்ள தாமரைக்குளத்தின் கரையோரம் ஜெயலட்சுமி (வயது 50) என்பவர் நாகபத்ரகாளி அம்மன் புற்றுகோவில் கட்டியும், அதன் முன்புறம் சுமார் 8 அடி உயரமுள்ள காளி சிலையை வைத்தும் பராமரித்து வந்தார்.
கோவில் அருகிலேயே வீட்டை கட்டி அதில் தனது மகள்கள் சசிகலா (28) மற்றும் சுகன்யா (27) ஆகியோருடன் வசித்து வந்தார். ஜெயலட்சுமியின் பாட்டி, தாய் தற்போது அவர் என 3-வது தலைமுறையாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலை பராமரிதது வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவுபடி பூந்தமல்லி தாசில்தார் செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து கோவில் மற்றும் வீடு இரண்டையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு தாய், மகள்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், இது கோர்ட்டு உத்தரவு என்று கூறி விட்டனர். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி அருகில் இருந்த தாமரைக்குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் இறங்கி அவரை பத்திரமாக மீட்டனர்.
அதேேநரத்தில் ஜெயலட்சுமியின் 2-வது மகளான சுகன்யா, தங்களது கோவில், வீடு இடிக்கப்பட்டதால் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில், வீடு மற்றும் கோவிலுக்கு வெளியே சிமெண்டால் வைக்கப்பட்டு இருந்த 18 அடி உயர சூலாயுதம் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளிவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.