கல்யாண சுந்தரேஸ்வரர்- கார்த்தியாயினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர்- கார்த்தியாயினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
குடவாசல்;
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் பிரசித்தி பெற்ற வீழிநாதர் கோவில் உள்ளது.தேவார பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை திருமால் 1000 தாமரை பூக்களால் அர்ச்சனை செய்து வணங்கியதாக புராண வரலாறு கூறுகிறது. மேலும் பார்வதி தேவி காத்தயாயன முனிவரின் மகளாக பிறந்து கார்த்தியாயினி என்ற பெயரில் இத்தலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரரை கரம் பிடித்தார் என்றும் இங்கு நடந்த திருமணத்துக்கு சான்றாக பந்தல் கால் கோவிலின் மகா மண்டபத்திலும், முகூர்த்த கால் கர்ப்ப கிரகத்திலும் கல்தூண்களாக இருக்கிறது.இந்த கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்பாளுக்கு தினசரி அபிஷேகம் கிடையாது. வருடத்தில் 5 நாட்கள் மட்டும் சிறப்பு அபிஷேகம் நடக்கும். நேற்று ஆடிமாத பிறப்பையொட்டி சாமி- அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிபாடு ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.