மேலூரில் கோவில் திருவிழா: மழை வேண்டி பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக சென்ற பெண்கள்- 100 ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து
மேலூரில் கோவில் திருவிழாவையொட்டி மழை வேண்டி பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக பெண்கள் சென்றனர். அங்கு 100 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து படைத்து வழிபாடு நடத்தினர்.
மேலூர்,
பொங்கல் திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் யூனியன் அலுவலகம் அருகில் சின்ன அடக்கியம்மன், பெரியடக்கிஅம்மன், ஆண்டிஅரசு ஆகிய 3 கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. சூரக்குண்டு, அய்யர்பட்டி, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், முனியாண்டிபட்டி ஆகிய கிராம மக்கள் காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெற வேண்டி புரட்டாசி மாத பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
பெண்கள் ஊர்வலம்
இதையொட்டி சூரக்குண்டு கிராமத்தில் இருந்து அனைவரும் ஒன்று கூடி சாமியாட்டத்துடன், பொங்கல் பானைகளை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அங்கு 3 கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பொங்கலிட்டு கம,கம கறி விருந்து நடைபெற்றது. விழாவில் மேலூர் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.