பட்டிவீரன்பட்டி உள்பட 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா

பட்டிவீரன்பட்டி உள்பட 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-10-15 17:38 GMT

பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், நெல்லூர் ஆகிய 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில்கள் உள்ளன. இந்த 6 கோவில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒரேமாதிரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 12-ந்தேதி எல்லை காவல்காரசாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பிறகு முத்தாலம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு கண் திறந்து ஆடை, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 13-ந்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்தநிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் முளைப்பாரி எடுத்து, மேளதாளம் முழங்க பின்னால் வர, அம்மன் சிங்க வாகனத்தில் வீதிஉலா வந்தார். பின்னர் அம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைந்தார். அத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்