பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் ரூ.27 லட்சத்து 41 ஆயிரம் உண்டியல் காணிக்கை
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நாளில் ரூ.27 லட்சத்து 41 ஆயிரம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.;
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நாளில் ரூ.27 லட்சத்து 41 ஆயிரம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
பொது ஆவுடையார் கோவில்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.
ஆடு, கோழி காணிக்கை
ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.
ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
சோமவார திருவிழா
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி சோம வார திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் கடைசி சோமவார விழா நடந்தது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை இணை ஆணையர் சூரிய நாராயணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் நாகையா தலைமையில் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதற்கு முன்பு 3-வது சோமவாரம் முடிவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4-வது சோமவாரம் முடிந்து நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், மற்றும் சிறப்பு அலுவலர்கள் மேற்பார்வையில் ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம் மற்றும் கிராம பிரமுகர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதற்கான பணியில் கோவில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.27 லட்சத்து 41 ஆயிரத்து 265 கிடைத்ததாக கோவில் செயல் அலுவலர் கூறினார்.