பள்ளிக்கூடமாக மாறிய கோவில் வளாகம்
தர்மபுரி மாவட்டம் பள்ளம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கனமழையால் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் பள்ளம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கனமழையால் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது பள்ளம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வசதியாக கடந்த 1970-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 16 மாணவர்களும், 13 மாணவிகளும் என மொத்தம் 29 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியரும், ஒரு உதவி ஆசிரியையும் பணிபுரிந்து வருகிறார்கள்.
சேதமடைந்த மேற்கூரைகள்
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தபோது பள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த ஓடுகள் தூக்கி வீசப்பட்டு மேற்கூரைகள் சேதமடைந்தன. இதனால் பள்ளி கட்டிட வளாகத்தில் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வி கற்க இயலாத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த பள்ளி கட்டிடத்தில் நடந்த வகுப்புகள் அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில்...
அதன்படி அங்கன்வாடி மையத்தின் ஒரு பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. வகுப்புகளும், அங்கன்வாடி மையமும் ஒரே பகுதியில் இயங்கியதால் போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே இடத்தில் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு ஆகியவை அந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. நன்றாக வெயில் அடிக்கும் நேரங்களில் இங்கும் பாடம் நடத்துவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும் மாணவ-மாணவிகளின் கல்வி திறன் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். அதன்மூலம் மாணவ-மாணவிகள் கல்வி கற்பதற்கு உகந்த சுற்றுச்சூழலை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காற்றோட்டம் இல்லை
பள்ளம்பட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தன்:-
இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கனமழையால் சேதமடைந்ததால் அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தன. அங்கு போதிய இடவசதி மற்றும் காற்றோட்ட வசதி இல்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில வகுப்புகளுக்கு கோவில் வளாகத்தில் பாடம் நடத்தப்படுகிறது. கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு இந்த பகுதியில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் மணி:-
கடந்த 5 மாதங்களாக முறையான வகுப்பறை இல்லாத சூழலில் இந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அங்கன்வாடி மையம், கோவில் வளாகம் மற்றும் அருகே உள்ள மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. இது மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை பாதித்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அவர்களுடைய கல்வி தரம் குறைந்து விடும். எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகளுடன் புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுவார்கள்.
விரைவாக சீரமைக்க வேண்டும்
குடும்பத்தலைவி ரகுஸ்:-
இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ஒரே இடத்தில் வகுப்பு நடந்த போது அங்கு போதிய இடவசதி இல்லாததால் சிறிய இடத்தில் அடைத்து வைத்ததை போன்ற சூழல் ஏற்பட்டது. 5 வகுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்துவதில் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அதன்பிறகு 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு ஆகியவை இங்குள்ள கோவில் வளாகத்திற்கு மாற்றப்பட்டன.
இந்த கோவிலின் முன்புறம் உள்ள மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டு இருப்பதால் அதிக வெயில் அடிக்கும்போது கீழ்ப்பகுதியில் வெப்பம் அதிகரிப்பதால் மாணவ-மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மரத்தடி நிழலில் அமர வைத்து பாடம் நடத்துவதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. எனவே இவற்றிற்கு தீர்வு காண இந்த பள்ளி கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.