காரிமங்கலம்:
காரிமங்கலத்தில், மொரப்பூர் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. தொடர்ந்து 24 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. இதையடுத்து மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி 18 நாட்களாக நடைபெற்றது. பின்னர் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய நிகழ்வில் மகாபாரத கதைகளை பகலில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு கூறுவார். பின்னர் அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவில் கூத்துக்கலைஞா்கள் நடித்து காட்டுவார்கள். அதன்படி 18-ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடக சபை கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் அணிந்தும், பஞ்சபாண்டவா் வேடம் அணிந்தும் அரங்கேற்றினர். இதனை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.