பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பூவோடு பற்றவைத்து ஆடும் நிகழ்ச்சியும், காலையில் பூவோடு ஆடி கோவில் முன்பு கீழே கொட்டி அம்மன் பாடல்களை வருத்தி பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை அக்னிசட்டி எடுத்தல், அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்துதல், இரவு மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் நேற்று கம்பம் பிடுங்கி கோவில் பூசாரி தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்று ஊர் பொது கிணற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கண்ணனூர் மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.