தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் தைப்பூச பால்குட ஊர்வலம், சாமி திருக்கல்யாண உற்சவம், விநாயகர் தேரோட்டம், சிவசுப்பிரமணிய சாமி தேரோட்டம், விழா கொடியிறக்கம், பல்லக்கு உற்சவம் ஆகியவை நடைபெற்றன.
விழாவின் கடைசி நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி சாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தெப்பக்குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.