பற்கள் பிடுங்கிய விவகாரம் - பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-08 03:52 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பல்வீர்சிங் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாளுக்கு நாள் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பல்வீர்சிங் மீது எற்கனவே 3 வழக்குகள் உள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரின் பேரில் பல்வீர்சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்