வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்: ஏற்காடு இளம்பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதலியை கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியது ஏன்? என்பது குறித்து கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2024-03-26 00:00 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே கடந்த 20-ந் தேதி ஒரு சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண்ணை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசி சென்றிருப்பது தெரியவந்தது.

கோவையில் உள்ள ஒரு கடையில் அந்த சூட்கேசை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பரவக்கோட்டையை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பவர் வாங்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணை கோவையில் கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியதை ஒப்புக்கொண்டார். மேலும், சூட்கேசில் பிணமாக கிடந்தது தனது கள்ளக்காதலியான தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமி (25) என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தனது கள்ளக்காதலியை கொலை செய்ததாக நட்ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் கனிவளவன் ஆகியோரை ஏற்காடு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதனிடையே கைதான நட்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணம் ஆகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், 5 மற்றும் 2 வயதில் 2 மகள்களும் உள்ளனர். ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி முடித்துள்ள நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்த்தேன். அதே நிறுவனத்தில் கணினி பிரிவில் என்னுடன் வேலை பார்த்து வந்த தேனியை சேர்ந்த சுபலட்சுமியின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

அப்போது அவர் தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாகவும் என்னிடம் கூறினார். அதற்கு நானும் எனக்கு திருமணம் ஆன விவரத்தை மறைத்து சுபலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினேன். அதன்பிறகு எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

வெளிநாட்டில் இருந்ததால் எங்களுக்கு இடையே யாரும் இடையூறாக இல்லாத நிலையில் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து வாழலாம் என்று முடிவு செய்து இந்தியா திரும்பினோம்.

சொந்த ஊருக்கு சென்ற சுபலட்சுமி தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் வசித்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு கோவைக்கு வந்தார். நானும் அங்கு சென்று பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் சுபலட்சுமிக்கு தெரியாமல் மன்னார்குடிக்கு சென்று எனது மனைவி, குழந்தைகளை அவ்வப்போது பார்த்து வந்தேன்.

கடந்த ஆண்டு வெளிநாட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு கோவைக்கு வந்து கள்ளக்காதலியுடன் வசித்தேன். ஏற்கனவே மனைவியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்தேன். இதை பார்த்த சுபலட்சுமி, தனது பெயரையும் (டாட் டூ) பச்சை குத்துமாறு கேட்டுக்கொண்டதால் அவரது பெயரையும் நான் கையில் குத்தினேன்.

சமீபத்தில் நான் சொந்த ஊருக்கு சென்றபோது, கையில் சுபலட்சுமி பெயரை பச்சை குத்தியதை எனது மனைவி பார்த்துவிட்டு அவள் யார்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் கள்ளக்காதலி பெயரை அழித்துவிட்டேன்.

அதன்பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி கோவைக்கு சென்றபோது, கையில் குத்திய பெயரை ஏன் அழித்தீர்கள்? என கேட்டு எனது கள்ளக்காதலி சுபலட்சுமி என்னிடம் தகராறு செய்தார். இதனால் அவருக்கும், எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நான், இரும்பு கம்பியால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இதனால் அவரது உடலை மறைக்க முடிவு செய்து எனது உறவினர் கனிவளவனிடம் தகவல் தெரிவித்தேன். பிறகு கோவையில் உள்ள ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் வாங்கி வந்து அதற்குள் சுபலட்சுமியின் உடலை அடைத்து வைத்தோம். பின்னர் கடந்த 1-ந் தேதி அந்த பிணத்துடன் கூடிய சூட்கேசை வாடகை கார் ஒன்றில் ஏற்றினோம். இதையடுத்து ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே அந்த சூட்கேசை வீசிவிட்டு அதே காரில் கோவைக்கு சென்றுவிட்டோம். அதன்பிறகு நான் ஊருக்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன். அதேசமயம் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்லவும் ஏற்பாடு செய்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். இன்னும் சிலநாட்கள் போலீஸ் என்னை பிடிக்காமல் இருந்திருந்தால் நான் வெளிநாடு தப்பிச்சென்று இருப்பேன்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட சுபலட்சுமியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய கணவர் மற்றும் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லாமல் சேலத்தில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்து விட்டு உறவினர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை

கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த சுபலட்சுமிக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே கருத்தடை செய்திருந்த அவர், அதனை நீக்க மறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அந்த நேரத்தில் நட்ராஜ் மனைவியை பார்க்க ஊருக்கு சென்ற ேபாது அங்கு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது கையில் இருந்த சுபலட்சுமி என்ற பெயருடன் கூடிய டாட்டூவை அழித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சுபலட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்த கொலை வழக்கில் கைதான நட்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த போது, ஏதோ வேகத்தில் தவறு செய்து விட்டேன். என்னை எப்படியாவது ஜாமீனில் எடுக்க உறவினர்களிடம் கூறுங்கள் என்று அவர் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்