போதிய வருமானம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
போதிய வருமானம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூசைதுரை, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு எண்ணூர் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பேட்டரி இருந்தது. இருவரையும் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், பெங்களூரைச் சேர்ந்த ரபிக் பாஷா (வயது 37) மற்றும் ஐசக்யத் ஜபி (32) என்பது தெரிந்தது. இவர்கள், ரெயில் மூலம் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, துணி வியாபாரம் செய்து வந்தனர்.
அதில் போதிய வருமானம் இல்லாததால் சொகுசாக வாழ விரும்பி திருட ஆரம்பித்தனர். இதற்காக தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார்சைக்கிளை திருடி, நம்பர் பிளேட்டை மாற்றினர். பின்னர் திருட்டு மோட்டார்சைக்கிளில் சென்று தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பேட்டரியை திருடிவிட்டு வரும்போது போலீசாரிடம் சிக்கியது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், பேட்டரி மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.