காதணி விழாவுக்கு வந்த உறவினர்களை மதுபோதையில் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
ஆலங்குடி அருகே காதணி விழாவுக்கு வந்த உறவினர்களை மதுபோதையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
காதணி விழா
ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி நெருஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இருந்தனர்.
இந்தநிலையில் கணேசன் மகன் மகாபிரபு (வயது 19), முத்துக்கருப்பன் மகன் மணிகண்டன் (20) ஆகியோர் மதுபோதையில் மாரிமுத்து மகன்களான ராமையா (43), நாகராஜன் (36) ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதையடுத்து காயம் அடைந்த நாகராஜன், ராமையாவை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாபிரபு, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.