ரூ.9¼ லட்சத்தை இரும்பு பெட்டியில் வைத்து கிணற்றில் வீசிய வாலிபர்கள் கைது

சேலத்தில் ரூ.9¼ லட்சத்தை இரும்பு பெட்டியில் வைத்து கிணற்றில் வீசிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். தனியார் பயிற்சி மையத்தில் திருடிய பணத்தை மறைக்க முயன்றது அம்பலமாகி உள்ளது.;

Update: 2022-06-08 19:56 GMT

சேலம்:

ரூ.9¼ லட்சம் திருட்டு

சேலம் 5 ரோடு அருகே ஸ்டேட் பேங்க் காலனியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தனியார் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கன்னங்குறிச்சியை சேர்ந்த திலக்ராஜ் (வயது 42) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி மையத்தில் மாணவர்களிடம் வசூலித்த பயிற்சி கட்டண தொகை ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 500-ஐ அலுவலக லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சென்றார்.

அதன்பிறகு கடந்த 5-ந் தேதி காலையில் பயிற்சி மையத்திற்கு திலக்ராஜ் வந்து பார்த்தபோது, லாக்கரில் இருந்த பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பயிற்சி மையத்தில் பணம் திருட்டு போனது குறித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சசிகுமார் (19), குமார் மகன் சிவனேசன் (19), அசரப் ஆகிய 3 பேரும் சேர்ந்து தனியார் பயிற்சி மையத்திற்குள் புகுந்து ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்தை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சசிகுமார், சிவனேசன் ஆகிய 2 பேரை நேற்று சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இவர்களது கூட்டாளியான அசரப் தலைமறைவாக உள்ளார். இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, திருடப்பட்ட பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி அதை பயிற்சி மையத்தின் அருகில் உள்ள 60 அடி கிணற்றுக்குள் போட்டு மறைத்து வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் சசிகுமார், சிவனேசன் ஆகியோர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிணற்றுக்குள் இறங்கி பணத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு போலீஸ் தரப்பில் இருந்து சூரமங்கலம் தீயணைப்பு துறையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தீயணைப்பு துறையினர்

அதன்பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிராஜ் அல் வனிஷ் தலைமையில் வீரர்கள் நேற்று மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட கிணற்றுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் உதவியுடன் 60 அடி கிணற்றுக்குள் தண்ணிரில் இறங்கி பணம் இருப்பதாக கூறப்படும் இரும்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 8 அடி வரை கிணற்றில் தண்ணீர் இருப்பதால் பெட்டியை எடுப்பதல் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், இரவு 7 மணி ஆகிவிட்டதால் கிணற்றில் பணத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி பணம் உள்ளதாக கூறப்படும் இரும்பு பெட்டியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்