வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே தன்னுடன் பேசாததால் வாலிபரை அவருடைய நண்பரே கத்தியால் குத்திக்கொலை செய்தார்.;

Update: 2023-04-05 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 18). கூலி தொழிலாளி. இவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மணிமேகலை ஈரோட்டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வருகிறார்.

இதனால் ராமச்சந்திரன் தனது பாட்டி பவுனம்பாளுடன் கொத்தனூரில் வசித்து வந்தார். ராமச்சந்திரனும், அதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ் (20) என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் மோகன்ராஜிடம் பேச வேண்டாம் என ராமச்சந்திரனிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திக்கொலை

இதன் காரணமாக அவர் மோகன்ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ராமச்சந்திரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோகன்ராஜ் தனது நண்பர் கந்தசாமி என்பவருடன் சென்றார்.

பின்னர் மோகன்ராஜ் ராமச்சந்திரனிடம், என்கிட்ட நீ பேச மாட்டியா என கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரனின் உறவினரான சரண் அய்யப்பன் என்பவர் அவர்களை சமாதானம் செய்தார். பின்னர் ராமச்சந்திரனை அங்கிருந்து அழைத்து சென்றார்.

இதையடுத்து ராமச்சந்திரன் தனது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி இரவு 10.30 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற மோகன்ராஜ் தனது நண்பர் கந்தசாமியுடன் சேர்ந்து ராமச்சந்திரனின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், கந்தசாமி ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 7.45 மணிக்கு அங்குள்ள கடலூர் - சித்தூர் சாலையில் கொத்தனூர் பஸ் நிறுத்தத்தில் ராமச்சந்திரனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ராமச்சந்திரனை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அது வரையில் அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தன்னுடன் பேசாததால் வாலிபரை கத்தியால் அவருடைய நண்பர் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்